வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் கண் சிகிச்சை பிரிவுக்கு ஆர்கன் (ARGON) மற்றும் யாக்
(YAG) ஆகிய இயந்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு பொது வைத்தியசாலையில் அண்மையில் நடைபெற்றது. இந்த இயந்திரங்கள் வைத்தியசாலைக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த இரு இயந்திரங்களும் சுமார் 48.4 மில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்தவையாகும்.

இந்த நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி உரையாற்றுகையில், அனைத்துலக மருத்துவ நல அமைப்பு பல வைத்தியசாலைகளில் தனது பணியை முன்னெடுத்து வருகின்றது. காலத்தின் தேவையை உணர்ந்து செயற்பட்டு வருகின்றமையால் மக்கள் பெருமளவு பயனடைகின்றனர். இந்த இயந்திரங்கள் மூலம் பூரணமான பார்வை இழப்பை தடுக்கலாம் என்றார்.
வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் நிலக்ஷன் தனது உரையில் இந்த இயந்திரங்கள்
எமது வைத்தியசாலைக்கு கிடைக்கப் பெற்றமை எமக்கு கிடைத்த வாய்ப்பாகும். மாதாந்தம் 200
தொடக்கம் 300 நோயாளர்கள் இதன் மூலம் பயனடைவர். இதனை வழங்கிய அனைத்துலக மருத்துவ நல அமைப்பிற்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.


















