புதிய வாகனங்களை கொள்வனவு செய்தவர்கள் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை பெறுவதற்காக இன்னும் 3 மாதங்கள் காத்திருக்கவேண்டும் என கூறப்படுகிறது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஒப்பந்தக்காரர்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டமை, புதிய விலை மனுக் கோரல் செயல்முறை தொடர்பான சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களைச் சரிபார்ப்பதில் ஏற்பட்ட தாமதம் போன்றனவே இதற்குக் காரணங்கள் என்றும் தெரியவந்துள்ளது. மோட்டார் போக்குவரத்துத் துறையில் பதிவுசெய்யப்பட்ட 127,745 உந்துருளிகள் மற்றும் 25,526 மின்சார சிற்றுந்துகள் உட்படக் கணிசமான எண்ணிக்கையிலான வாகனங்கள், வாகன இலக்கத் தகடுகளைப் பெறக் காத்திருக்கின்றன.
கடந்த ஒப்பந்தக்காரருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்ததுடன், மேலும் மாற்று ஒப்பந்தக்காரர் இல்லாததால் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் வாகன இலக்கத் தகடுகளை வழங்குவதை நிறுத்த வேண்டியிருந்தது. விலை மனுக் கோரல் செயல்பாட்டில் தொழில்நுட்ப மற்றும் கொள்முதல் சிக்கல்கள் காரணமாக புதிய ஒப்பந்தக்காரரைக் கண்டுபிடிக்கும் செயல்முறை தாமதமாகியுள்ளது.
புதிய இலக்க தகட்டில் 7 சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
மேலும் அவற்றைச் சோதிப்பதில் ஏற்பட்ட சிக்கல்களே இலக்கத் தகடுகளை வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.


















