மன்னார் – விடத்தல்தீவு இயற்கை சரணாலயத்தில் இறால் வளர்ப்புத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக, அதன் எல்லைகளை மாற்றி அமைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய, வனஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் பதவிக்காலத்தில், 2024 ஆம் ஆண்டு மே 6 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி செல்லுபடியற்றதாக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலாக, 2025 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதியிடப்பட்ட புதிய விசேட வர்த்தமானி மூலம் முன்னைய அறிவித்தல் அதிகாரப்பூர்வமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதையடுத்து, குறித்த வர்த்தமானிக்கு எதிராக சுற்றாடல் அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமைகள் மனுக்கள் இன்று மீளப்பெறப்பட்டன.
இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம், சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகள் இந்த மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.
விடத்தல்தீவு இயற்கை சரணாலயம் இலங்கையின் மிக முக்கியமான கடல்சார் மற்றும் கடலோரப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும்.
இது அடர்த்தியான சதுப்புநிலக் காடுகள், உவர் சதுப்பு நிலங்கள், கடற்பாசி படுகைகள் மற்றும் பவளப்பாறைகளைக் கொண்ட ஒரு வளமான சுற்றுச்சூழல் மண்டலமாகும். இது அரிய வகை உயிரினங்களின் வாழ்விடமாக இருப்பதுடன், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரும் பங்களிப்பை வழங்குகிறது.
முன்னைய வர்த்தமானி மூலம் இந்த சரணாலயத்தின் ஒரு பகுதி பாதுகாப்பு அந்தஸ்திலிருந்து நீக்கப்பட்டமை பாரிய சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தும் எனச் சூழலியலாளர்கள் தொடர்ச்சியாக எச்சரித்து வந்த நிலையில், தற்போது அதன் பாதுகாப்பு மீள உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


















