முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு கொழும்பில் வீடு இல்லை என கூறுகிறார், ஆனால் ‘வியத்புர’ வீட்டுத்திட்டத்தில் வீடொன்று ஒதுக்கப்பட்டுள்ளது. மஹிந்தவுக்கு மட்டுமல்லாமல் முன்னாள் அரசியல்வாதிகள், ஆதரவாளர்கள் என சுமார் 529 பேருக்கும் இந்த வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற 2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி, செலவீனத்தலைப்பு மீதான குழநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில், எமது வரவு – செலவுத் திட்டம் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டுக்களை மாத்திரமே முன்வைத்தார்.
முன்மொழிவுகளில் ஏதுமில்லை. பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் திட்டமில்லை. அரச சேவையாளர் களுக்கு சம்பள அதிகரிப்பு இல்லை என்று குறிப்பிட்டார். பட்டதாரிகளுக்கு அரச நியமனங்களை வழங்க வேண்டும். இருப்பினும் அது குறித்த நிறுவனத்துக்கு அல்லது திணைக்களத்துக்கு பொருத்தமான தாக அமைய வேண்டும். இதனால் தான் தற்போது பட்டதாரிகள் போட்டிப்பரீட்சை ஊடாக தெரிவு செய்யப்படுகிறார்கள்.
அரச சேவைக்கு அரசியல் சிபாரிசுகளுடன் நியமனங்களை வழங்க முடியாது. அவ்வாறு வழங்கினால் வினைத்திறனற்ற அரச நிர்வாகவே தோற்றம் பொறும், நாட்டு மக்கள்தான் பாதிக்கப்படுவர். போட்டிப்பரீட்சையை தவிர்த்து எதிர்கட்சித் தவைரின் கொள்கைக்கு அமைய உயரம் என்றால் மெய்பாதுகாவலாளி, குட்டை என்றால் தொழிலாளி என்று நியமனம் வழங்க முடியாது. அடுத்த ஆண்டு 75 ஆயிரம் பேரை அரச நியமனத்துக்குள் உள்ளீர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் பட்டதாரிகளும் உள்ளடங்குவார்கள்.
பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்புக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.
இந்த அதிகரிப்புக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடளிப்பதாக எதிர்க்கட்சி எம்.பி ரோஹிணி கவிரத்ன கூறினார். இந்த கருத்தால் ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரே அந்த எம்.பி.க்கு எதிராக பேசினார். சம்பள அதிகரிப்பு எதிர்ப்பு தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்திக்கு அக்கட்சியின் பங்காளிக் கட்சித் தலைவர்களான மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஸ்ணன் மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் எதிராகியுள்ளமை வரவேற்கத்தக்கது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு கொழும்பில் வீடு இல்லை என்கின்றனர். அவருக்கு ‘வியத்புர’ வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் முன்னாள் அரசியல்வாதிகள்,அரசியல் ஆதரவாளர்கள் என்ற அடிப்படையில் 529 பேருக்கு இந்த வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்பட்டுள்ளது.இது முறையற்ற வகையிலேயே வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


















