-ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை-
நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டரீதியாக உரித்துள்ள தொழில்சார் உரிமைகளுக்கு அமைய தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரிடும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
தற்போது ரயில்வே திணைக்களத்திற்குள் தொடர்ந்து நிலவும் நிர்வாக வினைத்திறனின்மை காரணமாக, பயணிகள் மட்டுமன்றி ரயில் ஊழியர்களும் கடும் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
ரயில் நிலைய அதிபர்களைச் சேர்ப்பது மற்றும் பதவி உயர்வு தொடர்பில் அவசியமான ஆட்சேர்ப்பு நடைமுறை தொடர்பான இடைக்கால ஏற்பாடுகளைத் தயாரித்து நடைமுறைப்படுத்துவது தொடர்ந்து தாமதப்படுத்தப்பட்டு வருகின்றது. இது ரயில் நிலைய அதிபர்களின் கடமை வினைத்திறனிலும், ஊழியர்களின் மனநிலையிலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், அரசாங்கத்தினால் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனர்த்தக் கடன் தொகையானது 400,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ள பின்னணியில், ரயில்வே திணைக்களத்தினால் அந்தத் தொகையை 250,000 வரை குறைத்து வழங்கத் தீர்மானித்திருப்பது பாரிய பிரச்சினை என அச்சங்கம் சுட்டிக்காட்டுகிறது.


















