-சு.பாஸ்கரன்-
கிளிநொச்சி மாவட்டத்தில் 2025-2026 பெரும்போக நெற்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கான உரமானியக் கொடுப்பனவுகளை வங்கியில் வைப்பிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக்குளம் உள்ளிட்ட பாரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசன குளங்களின் கீழான வயல் நிலங்களிலும் மானாவாரி வயல் நிலங்களிலும் சுமார் எழுபதாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் இவ்வாண்டு பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசாங்கத்தினால் விவசாயிகளுக்காக வழங்கப்படும் மானிய உரக் கொடுப்பனவுகள் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்த அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பத்து கமநல சேவை நிலையங்கள் ஊடாகவும் ஹெக்ரேயர் ஒன்றுக்கு இருபத்தையாயிரம் ரூபா வீதம் இரண்டு கட்டங்களாக பெரும்போக நெற்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கான மானிய உரக் கொடுப்பனவுக்குரிய பணம் வங்கிகளில் வைப்பில் இடப்படும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக கடந்த 16 ஆம் திகதி முதல் வைப்பிலிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில 6 ஆயிரத்து 256 விவசாயிகளுக்கு 4649.175 ஹெக்ரேயருக்குரிய பணம் இதுவரை வைப்பிலிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஏனைய விவசாயிகளுக்கான மானிய உரக் கொடுப்பனவுகள் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















