கந்தளாய் சீனிபுரப் பகுதியில், பல ஏக்கர் கணக்கிலான சோளப் பயிர்ச்செய்கையில் படைப்புழுவின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளதால், விவசாயிகள் பெரும் கவலை தெரிவித்துள்ளனர்.
கந்தளாய் பிரதேசத்தின் அக்போபுர, ஜெயந்திபுர, சீனிபுர உள்ளிட்ட பகுதிகளில் தற்போது விரிவாக சோளப் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது சோளப் பயிர்கள் கதிர் வருகின்ற நிலையிலேயே இந்தப் படைப்புழுத் தாக்குதல் அதிகரித்திருப்பது, பெருமளவில் பாதிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
படைப்புழுவின் பரவலைக் கட்டுப்படுத்த பல வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்தும் எந்தவிதப் பலனும் இல்லாத நிலையில் உள்ளோம். மருந்துகளைப் பயன்படுத்திய பின்னரும் தாக்கம் குறையாததால், செய்கை முழுவதும் அழிவடையும் அபாயம் உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

சோளப் பயிர்ச்செய்கையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், வேளாண்மைத் திணைக்களம் உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு, படைப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளையும், புதிய வீரியம் மிக்க இரசாயனப் பரிந்துரைகளையும் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


















