-பொலிஸ் பேச்சாளர் தகவல்-
வெளிநாடுகளில் மறைந்துள்ள குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை நாட்டிற்கு கொண்டு வரும் திட்டத்தின் கீழ், கடந்த 3 ஆண்டுகளில் 30 பாரிய குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வர முடிந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் தெரிவித்தார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்:-
திட்டமிட்ட குற்ற கும்பல் உறுப்பினரான மிதிகம சூட்டி என்ற பிரபாத் மதுசங்க நேற்று நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார். இவர் கொலை, பாரிய கொள்ளை, துப்பாக்கி வைத்திருத்தல், ஆயுதக் கடத்தல், கள்ளப் பணப் புழக்கம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் ஆவார்.
இவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி பெறப்படவுள்ளது.
சர்வதேச உறவுகள் காரணமாக, சிவப்பு அறிவித்தல் இன்றியும் சந்தேகநபர்களை நாட்டிற்கு அழைத்து வர முடிகிறது. அவ்வாறு 13 சந்தேகநபர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
கடந்த 28 ஆம் திகதி இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட இரு சந்தேகநபர்களும் சிவப்பு அறிவித்தல் இன்றியே கொண்டு வரப்பட்டனர்.
தற்போது வரை 88 திட்டமிட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது என்றார்.


















