அரசாங்கப் பிணையங்களில் (Government Securities) வெளிநாட்டு முதலீடுகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூபா மதிப்பிலான பிணைமுறி (Bonds) மற்றும் திறைசேரி உண்டியல்களில் (Treasury Bills) தமது முதலீடுகளைத் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர்.
அதன்படி, கடந்த 23 ஆம் திகதிய நிலவரப்படி, திறைசேரி உண்டியல்கள் மற்றும் பிணைமுறிகளில் உள்ள வெளிநாட்டு உடைமைகள் ரூ. 130.96 பில்லியனாக உயர்ந்துள்ளது. இது 2023 நவம்பர் 16 ஆம் திகதிக்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த அளவாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 23 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் மட்டும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அரசாங்கப் பிணையங்களில் ரூ. 606 மில்லியன் நிகர முதலீட்டை மேற்கொண்டுள்ளனர். அதிக வட்டி வீதங்கள் மற்றும் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மீதான நம்பிக்கை காரணமாகவே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூபா மதிப்பிலான இந்தப் பத்திரங்களில் தமது ஆர்வத்தைத் தொடர்ந்து அதிகரித்து வருவதாக நிதிச் சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


















