-சட்டத்தரணி மனோஜ் கமகே-
ஷிரந்தி ராஜபக்சவை இலக்கு வைப்பதன் மூலம் மஹிந்தவை வீழ்த்திவிடலாமென அரசாங்கம் நினைக்கின்றமை ஒருபோதும் நிகழாதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
சிரிலிய விவகாரம் தொடர்பில் தொடர்பான விசாரணைக்கு ஷிரந்தி ராஜபக்ச அண்மையில் அழைக்கப்பட்டிருந்தார்.எனினும், அவர் முன்னிலையாகவில்லை. தனது சட்டத்தரணிகள் ஊடாக இரு வாரங்கள் அவகாசம் கோரி இருந்தார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்கமைய அவர் நேற்று முன் தினம் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்தார்.
இந்நிலையிலேயே நிதி குற்ற விசாரணைப் பிரிவு வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் சட்டத்தரணி மனோஜ் கமகே கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்து மேலும் குறிப்பிடுகையில்:
மஹிந்த ராஜபக்சவை வீழ்த்த முடியாது என்பது ஆளுங்கட்சிக்கு தெரியும்.
அதனால்தான் அவரது பாரியாரை இலக்கு வைத்து அவருக்கு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என நினைக்கின்றது போலும். அதுவும் நடக்காது.
ஷிரந்தி கல்விக்கு சேவையாற்றியவர். அது பற்றி பேசப்படுவதில்லை. சிரிலிய கணக்கு பற்றியே பேசப்படுகின்றது என்றார்.


















