-பிரதமர் ஹரிணி அமரசூரிய-
ஸ்மார்ட் பலகைகளுக்காக பெற்றோரிடம் பணம் சேகரிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு குறிப்பிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலிச் செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு முன்னுரிமை வழங்கி கேள்விகளை கேட்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் தயவுடன் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை அவர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு
மேலும் தெரிவிக்கையில்:
இலவச கல்வி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அக்கறை கொண்டுள்ளதையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் கடந்த காலங்களில் இவ்வாறான கொள்கையை கொண்டிருக்கவில்லை. தற்போது மாற்றமடைந்துள்ளதையிட்டு அவருக்கு நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலிச் செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு முன்னுரிமை வழங்கி கேள்விகளை கேட்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் கம்பஹா விக்கிரமராராச்சி பல்கலைக்கழகத்தை மூடுவதற்கும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
முறையான வழிமுறைகள் மற்றும் வளங்கள் இல்லாமலேயே கம்பஹா விக்கிரமராராச்சி பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இதனால் அங்கு கல்வி பயிலும் மாணவர்களே பாதிக்கப்பட்டுள்ளானர்.இது குறித்து ஆராய்வதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இவ்வருடம் முதற்கட்டமாக 1500 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில்,ஸ்மார்ட் பலகைகளுக்காக பெற்றோரிடம் பணம் சேகரிக்க வேண்டாம் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனவே பணம் சேகரிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துங்கள் என்று பகிரங்கமாக கேட்டுக்கொள்கிறேன் என்றார்.


















