-ஒன்பது பேர் கொண்ட குழு நியமனம்-
வென்னப்புவ – லுணவில பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்து தொடர்பில் விசாரணைகளை நடத்த விமானப்படை அதிகாரிகள் அடங்கிய 9 பேர் கொண்டு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கப்டன் ஏரந்த கீகனகே கூறியுள்ளார்.
நாட்டில் ஏற்படும் எந்தவொரு அனர்த்தத்தின்போதும், பாதிக்கப்பட்ட மக்கள் தமது உயிர் பற்றிய நம்பிக்கையை, மீட்புக் குழுவினர் தமது பகுதிகளுக்கு வரும்போதுதான் வளர்த்துக்கொள்கின்றனர். சமீபத்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு, இந்த வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களின்போதும் இலங்கை விமானப்படை ஒரு மகத்தான மனிதாபிமானப் பணியைச் செய்து வருகிறது. அந்த மாபெரும் நடவடிக்கைகளுக்கு மத்தியில், நேற்றுமுன்தினம் இலங்கையர்களின் இதயங்களை உலுக்கிய சம்பவம் ஒன்று பதிவானது.
மனிதாபிமான மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெ லிகொப்டர் விபத்துக்குள்ளானது. வென்னப்புவ, லுணுவில பாலத்தருகே இருந்த மக்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கத் தயாராக இருந்தது.
பாதுகாப்பாகத் தரையிறக்க விமானிகள் முயற்சித்துள்ள நிலையில் அதற்குள்ளாகவே ஹெலிகொப்டர் ஆற்றில் விழுந்துள்ளது. ஹெலிகொப்டரில் பயணித்த விமானி உட்பட 5 பேரையும் பிரதேச மக்கள் பெரும் முயற்சி எடுத்து மீட்டு, பின்னர் சிகிச்சைக்காக மாரவில வைத்தியசாலையில் அனுமதித்தனர். எவ்வாறாயினும், விமானத்திலிருந்த விமானிகளில் ஒருவர் துரதிர்ஷ;டவசமாக உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர், 41 வயதான விமானப்படை அதிகாரியான விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாப்பிட்டிய ஆவார்.
அனுபவம் வாய்ந்த விமானியான அவரது மறைவு தற்போது நாட்டையே உலுக்கிய ஒரு சம்பவமாக மாறியுள்ளது. இதற்கிடையில், அவரைப் பற்றிய மற்றொரு உருக்கமான விடயம் இன்று பதிவாகியுள்ளது. விமானி நிர்மால் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் தொடர்பான முதுமாணி பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். அவர் இன்று நடைபெறவிருந்த அதற்கான பட்டமளிப்பு விழாவிலும் கலந்துகொள்ளத் தயாராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
















