அரச துறை மற்றும் கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றிலுள்ள சுமார் 10,000 நிரந்தரமற்ற நிலையிலுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை தமிழரசுக் கட்சி எம்.பி பத்மநாதன் சத்தியலிங்கம் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சத்தியலிங்கம் எம்.பி தமது கேள்வியின் போது, சுமார் பத்தாயிரம் தற்காலிக, அமைய அடிப்படையிலான ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தில் ரயில் கடவை காப்பாளர்களும் உள்ளடக்கப்படுகின்றனரா என வினவினார்.
அதற்கு அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
ரயில் கடவை காப்பாளர்களுக்கு அவர்கள் இதுவரை பெற்று வந்த 7500 ரூபா கொடுப்பனவை பதினையாயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் அதன் மூலம் ரயில்வே கடவைகளில் நிலவும் பாதுகாப்பற்ற நிலைமை முழுமையாக நிவர்த்தியடையும் என நாம் கூற முடியாது. அதற்கு நீண்டகால வேலைத்திட்டம் ஒன்றை நாம் முன்னெடுக்க வேண்டியது அவசியம்.
அரசாங்கமானது நிரந்தரமற்ற சேவை நிலையில் உள்ளவர்களை ஒவ்வொரு மட்டத்தில் சேவைகளுக்காக நியமித்துள்ளது. அந்த வகையில் சுமார் 9,800 பேரை நிரந்தரமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
அவற்றில் சில தொழில்துறைக்காக இணைத்துக் கொள்ளும் போது அவர்கள் தேவையான கல்வித் தகைமையைக் கொண்டிருக்க வேண்டும்.
அந்த வகையில் ரயில் கடவைக் காப்பாளர்கள் மட்டுமன்றி வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்களைக் குறிப்பிடும்போது அவர்களில் 700 பேருக்கு நாம் நியமனங்களை வழங்கினோம் மேலும் 300 பேர் உள்ளனர்.
அவர்கள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றியிருக்க வேண்டும். சித்தியடைந்தமை தொடர்பில் கவனத்திற் கொள்ளப்படவில்லை.
அதன்பிரகாரம் ரயில் கடவை காப்பாளர்களுக்கும் அவ்வாறான தகைமை கோரப்படுகிறது. அந்த வகையில் அனைவரையும் அரசாங்கம் நிரந்தரமாக்கும் என்பதை என்னால் கூற முடியாது. எனினும் பொதுவாக சுமார் 10,000 நிரந்தரமற்ற ஊழியர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அரச துறை மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றிலுள்ள தற்காலிக மற்றும் அமைய என நிரந்தரமற்ற நிலையிலுள்ள ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.


















