12 வயதிற்குட்பட்ட சிறார்களின் சமூக ஊடக அணுகலை தடைசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சிறுவர், மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் கூறியுள்ளார்.
12 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் கைப்பேசிப் பயன்பாட்டை முழுமையாக நிறுத்த வேண்டும் என அரசாங்கம் ஏற்கனவே முன்மொழிந்துள்ள நிலையில்,
அதற்கு இணையாக சமூக ஊடகப் பயன்பாட்டையும் தடை செய்வது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகள் பாடசாலை மாணவர்களுக்குச் சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடைசெய்ய சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பிலும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
பிள்ளைகள் இணையத்துடன் இணைவதன் மூலம் இடம்பெறும் பல்வேறு ஒழுக்கக்கேடான சம்பவங்கள் அதிகரித்து வருவதால், சமூக ஊடகங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கு எதிரான சைபர் குற்றங்களைக் கையாள்வதற்காகப் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்குக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இதேவேளை 2025ம் ஆண்டில் மட்டும் சிறுவர் தொடர்பான, 10,455 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்குக் கிடைத்துள்ளன. அவற்றில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்டத்தின் கீழ் 8,514 முறைப்பாடுகளும், அதன் நேரடி எல்லைக்குள் வராத 1,941 முறைப்பாடுகளும் உள்ளடங்குகின்றன என்றார்.

















