சிலாபம் பகுதியில் தனது தாய் மற்றும் தந்தையுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த சிறுமி ஒருவர், அவரது நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணத்தைக் கண்டறிய சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதன்போது, அவர் ஏற்கனவே இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சிகரமான முறையில் தெரியவந்துள்ளதாக சிலாபம் பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்தது.
ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலையொன்றில் 9 ஆம் தரத்தில் கல்வி பயிலும் 14 வயது மற்றும் 7 மாதங்களையுடைய மாணவியே இவ்வாறு பாதிப்புக்குள்ளாகியுள்ளார். சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமி பொலிஸாரிடம் விரிவான வாக்குமூலம் ஒன்றை வழங்கினார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி, நாத்தாண்டிய – வலகாப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த உறவினர் ஒருவர் தனது வீட்டில் வைத்து முதன்முதலில் அத்துமீறலில் ஈடுபட்டதாகச் சிறுமி மாரவில பொலிஸாரிடம் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டிய அந்த உறவினர், சிறுமிக்கு 500 ரூபா பணத்தையும் வழங்கினார்.
இச்சம்பவம் தொடர்பில் 37 வயதுடைய சந்தேகநபர் மாரவில பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், அவர் மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இதனைத் தவிர, 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் திகதி, நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த தனது காதலனுடன் ஒரே நாளில் இரண்டு முறை உடலுறவில் ஈடுபட்டதாகச் சிறுமி வாக்குமூலம் அளித்தார். தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக அவர் உறுதியளித்ததால், இச்சம்பவம் குறித்து யாருக்கும் தெரிவிக்காமல் மறைத்ததாகச் சிறுமி குறிப்பிட்டார்.
குறித்த சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறுமியின் தாய் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றிருந்தமை விசாரணைகளில் தெரியவந்தது. தலைமறைவாக உள்ள சந்தேகநபரான காதலனைக் கைது செய்ய சிலாபம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தற்போது தனது தாயின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள சிறுமி தொடர்பில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


















