-ரணில் விக்கிரமசிங்க 1007.346 மில்லியன் செலவிட்டுள்ளாராம்-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக் காலத்தில் 22 மாதங்களில் 24 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளதுடன் அதற்காக மொத்தமாக 1007.346 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த ஒரு வருட காலத்தில் மேற்கொண்ட 8 வெளிநாட்டு பயணங்களுக்காக 14.9 மில்லியன் ரூபா மாத்திரமே செலவாகியுள்ளது.
மேற்கண்டவாறு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செல வீன தலைப்பின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
2000 ஆம் ஆண்டுக்கு பின்னரான அரசாங்கங்களில் முதல் ஒரு வருடத்தில் அதிகளவான சட்டமூலங்களை எமது அரசாங்கமே நிறைவேற்றியுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்கள் சகல அரசியல் குழுக்களினால் கொண்டு வரப்பட்டது. ஆனால் அரசியல் மாற்றங்களின் போதும், மக்கள் ஆணைகள் புதுப்பிக்கப்படும் போதும் அந்த ஆணைக்குழுக்களின் பணிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
அதற்கான வேலைத்திட்டங்களை செய்யவேண்டும். நாடு வேகமாக பயணிக்க முயற்சிக்கும் போது அதற்கு உதவக்கூடியவாறே ஆணைக்குழுக்கள் அமைந்திருக்க வேண்டும். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது அவருக்கு 39 ஆலோசகர்கள் இருந்தனர். ஆனால் தற்போதைய ஜனாதிபதிக்கு ஐந்து ஆலோசகர்கள் இருந்தாலும் அவர்கள் தன்னார்வ அடிப்படையில் சம்பளம் இன்றியே பணியாற்றுகின்றனர். அத்துடன் ஜனாதிபதி செயலகத்தின் மேலும் பல செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன. இதேவேளை கடந்த காலங்களில் ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயணங்களின் போது பெருமளவில் நிதி செலவிடப்பட்டுள்ளது. அந்த செலவுகள் தற்போதைய ஜனாதிபதியினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதாவது ரணில் விக்கிரமசிங்க 2022இல் நான்கு வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை செய்துள்ளார். இதன்போது 64 பேர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதற்காக 129.31 மில்லியன் ரூபா செலவாகியுள்ளது. 2023இல் 16 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். இதன்போது 269 பேர் சென்றுள்ளனர். இதற்காக 577.9 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. அத்துடன் 2024 இல் 5 பயணங்கயை மேற்கொண்டுள்ளதுடன், இதன்போது 115 பேர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதற்காக 300 மில்லியன் ரூபா செலவாகியுள்ளது. 22 மாதங்களில் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டுள்ள 24 வெளிநாட்டு பயணங்களுக்காக 385 பேர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 1007.346 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2024 டிசம்பர் மாதத்தில் இருந்து 2025 செப்டம்பர் மாதம் வரையில் 8 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். இவற்றுக்காக 14.9 மில்லியன் ரூபாவே செலவிடப்பட்டுள்ளது என்றார்.















