‘சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவையின் 1990 இலக்கத்தை மாற்றி 8889 என்று இலக்கமிட முயற்சிக்க வேண்டாம்’ என்று எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக்க எம்.பி. அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழான 2446/34 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் பேசுகையில்:-
இன்றுவரை அரச வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு நிலவுகிறது. உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் என்பவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடித் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
சுவசெரிய சேவையை மாற்றியமைக்க போவதில்லை என்று அமைச்சர் கூறினார். ஆனால் அந்த சேவையை மாற்றியமைப்பதாக அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் தான் ஆரம்பத்தில் குறிப்பிட்டார்.
இது அரசாங்கத்தின் முரண்பாட்டையும், கொள்கை வேறுபாட்டையும் வெளிப்படுத்துகிறது. 1990 என்ற அவசர அம்பியூலன்ஸ் சேவை இலக்கத்தை மாற்றி 8889 என்று இலக்கமிட அரசாங்கம் முயற்சிக்க கூடாது. 1990 என்று சுவசெரிய இலக்கம் மக்கள் மனங்களில் உள்ளது.
மருந்துகளின் தரம் மற்றும் விலைகள் குறித்து அரசாங்கம் உறுதியான கொள்கையை கடைப் பிடிக்க வேண்டும். நிர்ணய விலைக்கு மாறாக அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

















