இலங்கை கடலோர காவல்ப்படை மற்றும் பிற சட்ட அமுலாக்க நிறுவனங்கள் ஊடாக 2025ம் ஆண்டில் சுமார் 370 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேற்படி போதைப் பொருட்களை கடத்திய குற்றச்சாட்டில் சுமார் 71 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை, பொலிஸார் ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையின் ஊடாக மேற்படி போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 5 கிலோவுக்கும் மேற்பட்ட ஐஸ், 710 கிலோ கஞ்சா, 205 கிலோ உள்ளூர் கஞ்சா, 2 கிலோவுக்கு மேற்பட்ட ஹீஷ;, 970 ப்ரீகபலின் குளிசைகள், 5,054 மதன மோடக மாத்திரைகள், 2,933 வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் 9,800 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கெண்டு இலைகள் உள்ளிட்ட கணிசமான அளவு சட்டவிரோத பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடல் வழியாக நாட்டிற்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 60,794 விவசாய இரசாயனப் பக்கெட்டுக்கள், போத்தல்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகளின்போது, கடத்தல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட 19 உள்ளூர் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 71 சந்தேகநபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


















