-பொருட்கள் விலையேற்றத்திற்கு நிவாரணம்-
பிணைமுறி விவகாரம் தொடர்பில் அடிக்குறிப்பு எழுதியவர்கள் ஊழல் – மோசடி தொடர்பில் பேசுவது வேடிக்கையாக உள்ளது என கூறியிருக்கும் வசந்த சமரசிங்க, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணமளிப்போம். வரவு செலவுத் திட்டம் மக்களுக்கு பயனுடையதாகவே அமையும் எனவும் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 2 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் பற்றி எதிர்க்கட்சியினர் மாத்திரமே குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
சர்வதேச நாணய நிதியத்தின் வரவு – செலவுத் திட்டம் என்று குறிப்பிடுகிறார்கள். நடுத்தர மக்கள் குறித்து கவனம் செலுத்தவில்லை என்று குறிப்பிடுகிறார்கள். வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் வெறுப்பை முன்னிலைப்படுத்தி பேசுகிறார்கள். ஊழல் மோசடி பற்றி பிணைமுறி மோசடி பற்றி அடிக்குறிப்பு எழுதியவர்கள் பேசுவது வேடிக்கையாகவுள்ளது.
ஊழல் மோசடிக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேசிய உற்பத்திகளை அதிகரித்து மக்களுக்கு நிவாரணமளிப்போம்.
பொருளாதார மீட்சிக்குரிய எந்த நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கவில்லை. 2028 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரசமுறை கடன்களை செலுத்துவது நெருக்கடிக்குள்ளாக்கப்படும் என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். பொருளாதார மீட்சி, வெளிநாட்டுக் கடன்களை செலுத்தல் பற்றி எதிர்க்கட்சிகள் அச்சமடைய வேண்டியதில்லை. பொருளாதார முகாமைத்துவத்திற்கான நடவடிக்கைகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2028 ஆம் ஆண்டு முதல் அரசமுறை கடன்கள் செலுத்தப்படும் என்றார்.


















