மாகாணசபைத் தேர்தலை எந்த முறையில் நடத்தலாம் என்று ஆராய்ந்து விதப்புரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு தாமதமில்லாமல் மூன்று மாதகாலத்துக்குள் அறிக்கை சமர்ப்பித்தால் இந்த ஆண்டுக்குள் மாகாணாசபைத் தேர்தலை நடத்தலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் சகல தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்.
மாகாணசபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பது பற்றி ஆராய்வதற்கு தற்போது விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு முழுமையாக அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னிலையாகி எமது தரப்பு யோசனைகளையும் முன்வைக்கவுள்ளோம்.
இந்த குழு நியமிக்கப்பட்டு மூன்று மாதகாலத்துக்குள் விதப்புரை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆகவே தாமதமில்லாமல் ஆராய்வுகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வலியுறுத்துகிறோம். இதற்கமைய 3 மாதகாலத்துக்குள் அறிக்கை சமர்ப்பித்தால் இந்த ஆண்டுக்குள் மாகாணாசபைத் தேர்தலை நடத்தலாம்.
இந்த விசேட செயற்குழு 03 மாத காலத்துக்குள் யோசனைகள் மற்றும் விதப்புரைகளை முன்வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறாயின் எதிர்வரும் மே மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். செயற்குழு அறிக்கை சமர்ப்பித்தவுடன் தேர்தலை விரைவாக நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை சட்டத்தின் அதிகாரத்துக்கமைய முன்னெடுப்போம். தேர்தலை விரைவாக நடத்தி மாகாணசபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை நியமிப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றார்.


















