அநுராதபுரம் – கெக்கிராவ பகுதியில் வாகன உரிமையாளர் ஒருவரிடம் ஐயாயிரம் ரூபா பணத்தை பலவந்தமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில், இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம் வலயத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலின ஹேவா பத்திரணவினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கெக்கிராவ பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகிய இருவருக்கே இவ்வாறு பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 25 ஆம் திகதி கெக்கிராவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போது, வாகன உரிமையாளர் ஒருவரை அச்சுறுத்தி 5,000 ரூபாவை இவர்கள் பெற்றுள்ளனர்.
இது குறித்து அநுராதபுரம் வலய பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டைத்த் தொடர்ந்து, கடந்த 26 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


















