மன்னார் மாவட்ட மக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட சிறப்பான நீர்சுத்திகரிப்பு மற்றும் சுகாதார மேம்பாட்டுத்திட்டம் என்பவற்றை அம்மாவட்ட நகரமக்கள் அனுபவிக்க முடியாமல் தடுத்தவர்களின் நோக்கம் என்னவென பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அவர் பேசுகையிலேயே மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
இலங்கையின் வடக்கு மாகாணத்தின் பெரு நிலப்பரப்பாகவுள்ள மன்னார் மாவட்டத்தின் மன்னார் நகரம், அதன் பௌதீக வரலாறு, கல்வி, சுற்றுலா மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த முக்கியமான நகரமாகும். 16,3096 மக்கள் தொகையைக் கொண்ட பல கல்வி நிறுவனங்கள், மாவட்டச் செயலகம், நீதிமன்றம், மாவட்ட வைத்தியசாலை, நகரசபை,பிரதேச சபைகள் எனப்பல நிறுவனக் கட்டமைப்புக்களைக் கொண்ட நகரமாகும். கடல்வள அதிகரிப்புக்கள், வர்த்தக நடவடிக்கைகள்,நெற்செய்கை மற்றும் கால்நடை வளர்ப்பு என தொழிற்துறை ரீதியாக வளர்ச்சி கண்டு வரும் நகரமாக மன்னார் பெருநகரம் அமைந்துள்ளது.
இந்நகரப்பகுதி மற்றும் மாவட்டம் வாழ் மக்களின் நலன்கருதி அரசினால் மக்களுக்காக மேற்கொள்ளப்படும் குடிநீர்வழங்கல், சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதிய நீர்சுத்திகரிப்பு நிலையங்கள், கழிவு நீர்தரமேற்றல் போன்றவற்றில் அக்கறை கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கி 69 மில்லியன் ரூபா வழங்க நகரசபையும், 8 மில்லியன் ரூபா செலவிட்டு மொத்தம் 77 மில்லியன் ரூபா செலவில் மன்னார் பகுதியில் சுகாதார மற்றும் கழிவுநீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் திட்டம் தேசிய நீர் வடிகாலமைப்பு சபையால் செயற்படுத்தப்பட்டது.
மக்களின்தேவை மற்றும் விலங்கினங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள், சூழலை மேம்படுத்துவதற்கான நிலைபேறான வழிகள் ஆய்வு செய்யப்பட்டு இத்திட்டம் 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் திகதி மன்னார் நகரசபைக்கு கையளிக்கப்பட்டு 2016ம் ஆண்டு வரை சீராக இயங்கி வந்ததை அமைச்சர் அறிவாரா என கேட்கின்றேன்.
மேலும் சிறப்பான நீர்சுத்திகரிப்பு, சுகாதார மேம்பாட்டுத்திட்டம், என்ன அடிப்படையில் உள்நோக்கம் கொண்டு இடைநிறுத்தப்பட்டுள்ளது என்ற கேள்வியுள்ளது.
அத்துடன் இத்திட்டத்தின் நன்மைகளை மன்னார் நகரமக்கள் அனுபவிக்க முடியாமல் தடுத்தவர்களின் நோக்கம் என்ன, இச்சுகாதாரத்திட்டம் மீண்டும் வேகமாக சிறப்பாக செயற்பட அமைச்சர் தாங்கள் எடுக்கும் நடவடிக்கை பற்றி தெளிவுபடுத்த முடியுமா, இத்திட்டத்தை தடுத்து நிறுத்தியவர்களின் நோக்கத்தை மீறி அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பதை தெளிவுபடுத்த முடியுமா என கேள்விகளை எழுப்பினார்.


















