2024 ஆம் ஆண்டு கனடாவின் ஒட்டாவாவில் இலங்கையைச் சேர்ந்த குடும்பமொன்றை கத்தியால் தாக்கி கொலை செய்த 20 வயது பெப்ரியோ டி-சொய்சா குற்றத்தை ஒட்டாவா நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
அத்துடன், தனுஷ்க விக்ரமசிங்க என்பவரையும் தாக்க முயற்சித்தமை தொடர்பான குற்றச்சாட்டையும் சந்தேகநபர் ஒப்புக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்றில் தாய், 4 பிள்ளைகள் மற்றும் அவர்களின் நண்பர் உள்ளிட்ட 6 பேர் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் திகதி கொலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ஒட்டாவா நீதிமன்றத்தில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தம்மீது சுமத்தப்பட்ட 6 குற்றச்சாட்டுக்களில், 4 குற்றச்சாட்டுக்களை இலங்கையரான சந்தேக நபர் டி சொய்சா ஏற்றுக் கொண்டுள்ளார்.
கொலைச் சம்பவம் இடம்பெற்றபோது, பெப்ரியோ டி-சொய்சா 19 வயதான மாணவராக இருந்தார். அவர் ஒட்டாவாவின் பர்ஹேவன் புறநகர்ப் பகுதியில் வசித்த விக்ரமசிங்க குடும்பத்தினருடன் வீட்டின் வசித்து வந்தார். நண்பர் என்ற ரீதியில் கற்றல் செயற்பாடுகளுக்காக இலங்கை மாணவரான பெப்ரியோ டி-சொய்சா, விக்ரமசிங்கவின் குடும்பத்துடன் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொலை இடம்பெற்ற தினத்திலேயே சந்தேகநபரான பெப்ரியோ டி-சொய்சா கைது செய்யப்பட்டார்.
பணமின்மை மற்றும் விசா காலாவதி காரணமாக இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டதாக ஆரம்ப வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
கொலைக்கு ஐந்து நாட்களுக்கு முன்பே திட்டம் தீட்டியிருந்துள்ளார். தற்கொலை முயற்சியும் செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் எந்த கல்வி அல்லது தொழில் செயற்பாடுகளிலும் ஈடுபடாமல், பெரும்பாலான நேரத்தை வீடியோ விளையாட்டுக்களில் தமது நேரத்தை செலவிட்டார் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கை விசாரணை செய்த ஒட்டாவா நீதிமன்றத்தின் நீதிபதி கெவின் பிலிப்ஸ், இந்த வழக்கில் வன்முறையின் அளவு திகைப்பூட்டும், கொடூரமானதாக காணப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எனினும், விசாரணை முழுவதும் டி சொய்சா அமைதியாக அமர்ந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிபதி ஏதாவது சொல்ல வேண்டுமா என்று கேட்டபோது, தான் செய்ததற்கு மிகவும் வருந்துவதாகவும், ‘நான் செய்ததன் உண்மையை ஒப்புக்கொள்வதில் வாழ்நாள் முழுவதும் செலவிடுவேன்’ என்றும் குற்றவாளியான டி.சொய்ஷா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தற்போது குற்றத்தை ஒப்புக் கொண்டாலும், ஒரு சமூகத்தை பதறவைக்கும் வகையில் கொலை நடத்தப்பட்டுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஒரு குடும்பத்தின் நம்பிக்கையை சீர்குழைத்து, கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனால் நீதிமன்றத்தின் கூட்டுத் தீர்மானங்களுக்கு தாம் இணங்குவதாக தெரிவித்த நீதிபதி பிலிப்ஸ் வழக்கை நிறைவுறுத்தியுள்ளார்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், டி-சொய்சாவுக்கு பிணையற்ற குறைந்தது 25 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
















