மாகாண சபைத் தேர்தலுக்கான புதிய தேர்தல் முறைமையொன்றை உருவாக்கும்போது சகல தரப்பினரது ஆலோசனைகளையும் கோர வேண்டுமென்ற ரீதியில் அது தேர்தலைப் பிற்போடும் செயற்பாடாக அமையாதென அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் மாகாணசபைத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகளின் பிரதம கொரடாவான கயந்த கருணாதிலக எம்.பி. முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்,
நல்லாட்சி அரசாங்கம் பழைய தேர்தல் முறைமையை இரத்துச் செய்து, புதிய தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்தியது. புதிய தேர்தல் முறைமை கலப்புத் தேர்தல் முறைமையாக அறிமுகப்படுத்தப்பட்டது. கலப்புத் தேர்தல் முறைமை 50 சதவீதம் தொகுதி அடிப்படையிலும் 50 சதவீதம் மேலதிகப் பட்டியல் அடிப்படையிலும் காணப்படுகின்றது. எவ்வாறிருப்பினும், நாட்டில் தற்போது மாகாண சபைத் தேர்தல் முறைமை ஒன்றுள்ளது.
புதிய தேர்தல் முறைமையில் தேர்தலை நடத்துவதென்றால் எல்லை நிர்ணயம் பிரதானவொன்றாக காணப்படுகிறது. எல்லை நிர்ணயத்தில் தொழில்நுட்ப விடயங்கள் உள்ளடக்காமல் இருப்பதே தற்போதைய பிரச்சினையாக இருக்கிறது. அதற்குத் தீர்வு காணவேண்டும். மாகாண சபைத் தேர்தல் குறித்து புதிய தேர்தல் முறைமையொன்றை உருவாக்கும் போது சகல தரப்பினரது ஆலோசனைகளையும் கோர வேண்டும். அது தேர்தலை பிற்போடும் செயற்பாடாக அமையாது. சகல தரப்பினருடனும் கலந்துரையாடுவது ஜனநாயகமாகும் என்றார்.


















