வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகிக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
அனர்த்தம் தொடர்பான காலநிலை முன்னெச்சரிக்கை அரசாங்கத்துக்கு கிடைக்கவில்லை என்றும் அவ்வாறான முன்னெச்சரிக்கை எதனையும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுவிக்கவில்லை என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளதுடன் முடிந்தால் நிரூபித்துக்காட்டட்டும் என தெரிவித்துள்ளது.
எனினும் அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னர் இதுதொடர்பான எதிர்வுகூறல்ளை வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் கடந்த காலங்களில் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது அவர்களுக்கும் ஏதாவது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகிறது. அரசாங்கத்துக்கு அவ்வாறான எந்த முன்னெச்சரிக்கைகள் எதுவும் கிடைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருகின்ற நிலையில் அரச அதிகாரிகளுக்காக குரல்கொடுக்க வேண்டிய நிலை எமக்கு ஏற்படுகிறது.
வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணா நாயக்க மற்றும் மலிக் பெர்ணான்டோ ஆகியோர் கடந்த நவம்பர் 11ஆம் திகதி முதல் 23ஆம் திகதிவரை அடிக்கடி செய்தியாளர் சந்திப்புகளை நடத்தி, காலநிலை தொடர்பான சில விடயங்களை வெளிப்படுத்தி வந்தனர்.
இந்த செய்தியாளர் சந்திப்புகளின்போது, எதிர்வரும் காலங்களில் மேல், சம்பரகமுவ, மத்திய, மாகாணங்களுக்கு 100 மில்லி மீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பதாகவும் காற்றின் வேகம் அதிகரித்து அது சுழி காற்றாக மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் அவதானமாக இருக்குமாறு எதிர்வு கூறியிருந்தனர்.
எனவே,இந்த அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை விடுத்தும் அரசாங்கம் அதுதொடர்பில் கண்டுகொள்ளாமல் இருந்ததா? அல்லது அதிகாரிகள் இதுதொடர்பில் சரியான தகவல்களை அரசாங்கத்துக்கு தெரிவிக்கவில்லையா என்பது தொடர்பில் தேடிப்பார்த்து உண்மையை கண்டறிய பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தேன்.என்றாலும் அரசாங்கம் இதுதொடர்பில் நடவகை;கை எடுப்பதாக தெரியவில்லை என்றார்.
















