நடிகர் வெற்றி கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம் ‘ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் அனீஸ் அஸ்ரப் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ சென்னை ஃபைல்ஸ்- முதல் பக்கம் ‘ திரைப்படத்தில் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
அரவிந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஜி ஆர் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சின்னத்தம்பி புரொடக்சன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை மீடியா மைண்ட்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
ஓகஸ்ட் 1 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பங்கு பற்றினர்.
இயக்குநர் அனீஸ் அஸ்ரப் பேசுகையில்,
முதல் பக்கம் என்பது கதைக்கு பொருத்தமானதாக இருந்ததால் வைத்திருக்கிறோம். சென்னை பைல்ஸ் முதல் பக்கம் என்பது சென்னையில் நடைபெற்ற ஒரு குற்ற சம்பவத்தின் முதல் பக்கத்தில் இடம் பிடித்திருக்கும் தகவல். இந்த படத்தில் சமூகத்திற்கு சொல்லப்பட வேண்டிய செய்தி ஒன்றினை மையமாக வைத்து தான் இப்படத்தின் கதையையும், திரைக்கதையையும் உருவாக்கி இருக்கிறேன். இது ரசிகர்களை கவரும் என நம்புகிறேன். ” என்றார்.
தயாரிப்பாளரும், வில்லனாக அறிமுகமாகும் நடிகருமான மகேஸ்வரன் தேவதாஸ் பேசுகையில், ” நான் கமல்ஹாசனின் ரசிகன். கொரோனா தொற்று காலகட்டத்தில் சிங்கப்பூரில் உள்ள சீனர்கள், மலாய்காரர்கள் என அனைவரும் தமிழ் படங்களைத் தான் பார்ப்பார்கள். இதை நான் உன்னிப்பாக கவனித்தேன். அதன் பிறகு என்னை தயார்படுத்திக் கொண்டு 46 வயதில் சிங்கப்பூரில் கட்டுமஸ்தான தேசிய ஆணழகன் என்ற பட்டத்தை வென்றேன்.
எனக்கு வில்லன்களை மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு திரைப்படத்திற்கும் வில்லன்கள் தான் முதுகெலும்பு போல் இருப்பார்கள். வில்லன்களுக்காகவே நான் வெற்றி பெற்ற பல தமிழ் திரைப்படங்களை பலமுறை பார்த்திருக்கிறேன். எனக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. இந்தப் படத்தில் முக்கியமான சோசியல் மெசேஜ் இருக்கிறது. இதனை கிரைம் திரில்லர் ஜேனரில் சொல்ல முடியும் என்பதை முதன்முதலாக முயற்சித்து இருக்கிறோம். ” என்றார்.

















