அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்போது பாதுகாப்பு முகாம்களில் உள்ள மக்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கான ஊட்டசத்து பிஸ்கட்டுகளை அவுஸ்ரேலிய அரசாங்கம் வழங்கியுள்ளது.
10.2 மெட்ரிக் தொன் எடையுள்ள முதல் பிஸ்கட் பொதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன. இவை மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தற்போது பாதுகாப்பு நிலையங்களில் உள்ள மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
துபாயில் உள்ள அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் பராமரிக்கப்படும் ஒரு கிடங்கிலிருந்து இந்த பிஸ்கட்கள், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL – 226 மூலம் துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன.
உலக உணவுத் திட்டத்துடன் அவுஸ்திரேலிய அரசாங்கம் கூட்டாக இணைந்து ஏற்பாடு செய்யப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், 3.5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் மதிப்புள்ள இந்த பிஸ்கட்களில் 70 மெட்ரிக் தொன் நாட்டுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த், உலக உணவுத் திட்ட இலங்கை வதிவிடப் பிரதிநிதி பிலிப் வார்ட் மற்றும் கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
















