நாங்கள் எடுத்துச் சொல்லும்போது எங்களை விமர்சித்த அரசாங்கம் இன்று தானே ஐ.எம்.எவ் நிபந்தனைகளை தளர்த்துவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ தெரிவித்துள்ளார்.
யட்டியாந்தோட்டை – கரவனெல்ல பகுதியில் இடம்பெற்ற நிவாரண பணிகளின்போது எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
இந்நேரத்தில் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணம் மற்றும் உதவிகளை அதிகபட்சமாக அவர்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் அரசாங்கம் அறிவிப்புச் செய்த இந்த நிவாரணங்கள் மக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பதை கள விஜயங்களின் போது அறிய முடிகின்றன.
இதுபோன்ற சூழ்நிலையில், திட்டமிட்டபடி உதவி பெற வேண்டியவர்களுக்கு அந்த உதவி போய் சேராத நிலை காணப்படுகின்றன. எனவே அரசாங்கம் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், உதவி வழங்கப்படுவதாக விளம்பரம் செய்வது போல் அந்த உதவி உண்மையில் மக்களைச் போய்ச்சேர வேண்டும். நாட்டில் ஆபத்தான வானிலை நிலைமை உருவாகி வருவதாக கடந்த 11 ஆம் திகதி முதல் அறிவிப்புச் செய்யப்பட்டு வந்துள்ளன. அதனை மறுக்க முடியாது.
காற்றழுத்த தாழ்வு பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி பின்னர் அது புயலாக உருவெடுக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிக்கும் போது, அதனைக் கருத்தில் கொண்டு இடர் முகாமைத்துவ நிலையம் முன்னாயத்தப் பணிகளை ஆரம்பித்திருக்க வேண்டும். மக்கள் மீது ஏற்படும் பாதிப்புக்களையும், அழுத்தங்களையும் குறைத்திருக்க முடியும். உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் முடிந்திருக்கும்.
எந்தவொரு பேரிடருக்கும் பின்னும் அரசியல்வாதிகள் அதனைப் பொறுப்பேற்க வேண்டும். இக்கட்டான காலங்களில் ஓடி ஒழியாமல் யதார்த்தத்துக்கு முகம் கொடுக்க வேண்டும். பொறுப்பை அதிகாரிகள் மீது சுமத்தாமல் இருப்பதும் மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாகிய கொள்கை வகுப்பாளர்களின் பொறுப்பாகும். நாம் கூறி வந்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அதனைப் புறக்கணித்து விட்டு, இப்போது அரசாங்கம் ஐ.எம்.எவ் உடன் பேச்சை ஆரம்பித்துள்ளது.
நிபந்தனை தளர்த்திக் கொள்வது எவ்வாறு என்று பேச ஆரம்பித்துள்ளது. ஐ.எம்.எவ் உடன் பேச்சு நடத்தி நிபந்தனைகளை தளர்த்தி மக்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். அரசாங்கத்தை விட ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்களே முக்கியம். யார் தடையாக இருந்தாலும், எந்த வரம்புகளையும் பொருட்படுத்தாமல் மக்களுக்கு உதவ எதிர்க்கட்சி பாடுபடும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
















