திருகோணமலை முத்து நகர் மக்கள் 53 வருடங்களாக விவசாயம் செய்துவந்த பூமி தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிட்டு அந்த மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) இடம்பெற்ற கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
திருகோணமலை முத்துநகர் மக்கள் 53 வருடகளாக விவசாயம் செய்துவந்த பூமி தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனால் 352 விவசாயிகள் 1000க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் பாதிக்கப்படப்போகின்றனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மக்கள் தற்போது வீதிக்கிறங்கி போராட ஆரம்பித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை கடந்த கால அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்படட நடவடிக்கையாக இருந்தாலும், தற்போது ஆட்சியில் இருக்கும் இந்த அரசாங்கத்துக்கு இது தொடர்பில் நடவடிக்கை எடுத்து அந்த மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இந்த சபையில் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.அத்துடன் அந்த பிரதேசத்தில் பள்ளிவாசல், கோயில், பாடசாலைகள் இருந்துள்ளன.
எனவே முத்துநகர் மக்கள் எதிர்கொண்டுள்ள இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களை வீதிக்கு இறக்கவிடமாட்டோம் என தெரிவித்த இந்த அரசாங்கம், அந்த மக்களுக்கு தற்போது நியாயமான தீர்வொன்றை பெற்றுக்கொடடுக்க வேண்டும் என்ற கேட்டுக்கொள்கிறோம் என்றார்.


















