கடந்த மாதம் நவம்பர் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட அவசர காலசட்டத்தில் உள்ளடங்கும் ஏற்பாடுகள் தற்போதைய இடர் நிலைமைக்கு பொருத்தமில்லாத விதிமுறைகள் காணப்படுகின்றன. கடந்த காலத்தைப்போன்று அந்த ஏற்பாடுகளை உள்ளீர்த்து சட்டத்தை அமுலாக்கியமைக்கான காரணம் என்ன என்று சட்டத்தரணி சாலிய பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் நிலவிய பேரிடர் சூழலில், ஆட்சியமைப்பு, மனித உரிமைகள் மற்றும் நிறுவக சவால்கள் போன்றவற்றை வழிநடத்துவது தொடர்பில், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பேரிடர் சூழ்நிலைகளான வெள்ளம், நிலச்சரிவு, புயல் உள்ளிட்ட இயற்கை அபாயங்களை நிர்வகிக்க 2025 நவம்பர் 28 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் நாடு முழுவதும் பொது அவசரகால நிலை அறிவிக்கப்பட்டது.
இந்த அனர்த்தத்தின் விசேடமான சூழ்நிலையில் அவசரகால நிலை அறிவிப்பு அவசியமானது எனக்கருதினாலும், வெளியிடப்பட்டுள்ள குறிப்பிட்ட அவசரகால சட்டம் கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன.
முன்னைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட பரந்த விரிவுடைய ஏற்பாடுகள் காணப்பட்ட உள்ளடக்கத்தின் சாரத்தை மீண்டும் பிரதிபலிப்பதோடு, பேரிடர் முகாமைத்துவம், நிவாரணம் அல்லது மீள்கட்டமைப்பு ஆகியவற்றுடன் தொடர்பில்லாத பரந்த அதிகாரங்களையும் வழங்குவதாக தெரிவித்தார்.
















