-அவுஸ். உதவி அமைச்சர் பிரதமரிடம் உறுதியளிப்பு-
இலங்கை கல்வி முன்னுரிமைகள் மற்றும் விரிவான அபிவிருத்தி இலக்குகளை முன்கொண்டு செல்வதற்கு நம்பகமான பங்காளியாக அவுஸ்திரேலியா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என அவுஸ். உதவி அமைச்சர் ஜூலியன் ஹிலு தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய குடியுரிமை, நெறிமுறைகள் மற்றும் பல் கலாசார விவகாரங்களுக்கான உதவி அமைச்சரும் சர்வதேச கல்விக்கான உதவி அமைச்சருமான ஜூலியன் ஹிலுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்குமிடையேயான சந்திப்பு நேற்று முன்தினம் கல்வி அமைச்சில் இடம்பெற்றது.
இச் சந்திப்பிலேயே உதவி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில் கல்வித் துறை, இருதரப்பு உறவுகள், அபிவிருத்தி ஒத்துழைப்பு, பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள், சுற்றுலா, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது, அண்மையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளைத் தொடர்ந்து, மனிதாபிமான உதவி மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்க அவுஸ்திரேலிய அரசு நன்கொடையாக வழங்கிய 3.5 மில்லியன் டொலர் நிதி பங்களிப்புக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
தற்போது காணாமல் போனவர்களைத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டு வருவதுடன் நாட்டில் இயல்பு நிலையை மீளக் கொண்டுவருகின்ற செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர்குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கல்விக்கான உதவி வழங்குதல், உயர்கல்வித் துறையை விரிவுபடுத்தல் மற்றும் அவுஸ்திரேலிய அரசு வழங்கும் புலமைப்பரிசில் திட்டங்கள் உள்ளிட்ட கல்வித் துறையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் நீண்டகாலமாக வழங்கி வரும் ஒத்துழைப்புகளை பிரதமர் பாராட்டினார்.
இந்நிலையில் இலங்கையின் நீண்டகால மூலோபாய பங்காளியாக நாட்டின் கல்வித் துறைக்கு ஆதரவளிப்பதாக அவுஸ்திரேலிய பிரதிநிதிகள் குழு உறுதியளித்தது. மேலும் இலங்கையின் கல்வி முன்னுரிமைகள் மற்றும் விரிவான அபிவிருத்தி இலக்குகளை முன்கொண்டு செல்வதில் நம்பகமான பங்காளியாக தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாகவும் பிரதிநிதிகள் குழுவினர் தெரிவித்தனர்.
















