-ஜனாதிபதி தெரிவிப்பு-
பெயர்ப் பலகையினை மாற்றுவதால் மாத்திரம் மன்னார் பொது வைத்தியசாலை திறம்பட இயங்கிவிடப்போவதில்லையென குறிப்பிட்ட ஜனாதிபதி, தேவையான வளங்கள் பூரணப்படுத்தப்பட்டால் மாத்திரமே திறம்பட இயங்க முடியுமெனவும் தெரிவித்தார்.
மன்னாரில் நேற்று முன்தினம் நடைபெற்ற விசேட மாவட்ட அபிவிருத்திக்கூட்டத்தின் போது காதர் மஸ்தான் எம்.பி. மன்னார் பொது வைத்தியசாலையினை மத்திய அரசின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு கோரினார். இந்நிலையில், றிசாட் பதியுதீன் எம்.பி.வடக்கு மாகாணசபை தேர்தலுக்கு முன்பதாக வைத்தியசாலையை மத்திய அரசின்கீழ் கொண்டுவருமாறும், இல்லாதுவிட்டால் சத்தியலிங்கம் எம்.பி.யும் சேர்ந்து மத்திய அரசின்கீழ் கொண்டுவர விடமாட்டார்கள். அவர் இப்பொழுதே அதற்கு எதிர்ப்பாக உள்ளார் எனக் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த சத்தியலிங்கம் எம்.பி. வைத்தியசாலை மாகாணத்திற்கு சொந்தமானதா, மத்திக்கு சொந்தமானதா என்பதல்ல. மன்னார் பொதுவைத்தியசாலையின் பிரதான பிரச்சினை வளப்பற்றாக்குறை. அதனை நிவர்த்தி செய்து தேவையான வளங்களை கொடுத்தால் வைத்தியசாலை திறம்பட இயங்கும். என்றார்.
இதற்கு ஜனாதிபதி ஒரு வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கென நடைமுறைகள் உள்ளது. அதனை பூர்த்தி செய்தே அவ்வாறு செய்யமுடியும். அத்தோடு வெறுமனே பெயர்ப் பலகையினை மாற்றுவதால் மாத்திரம் வைத்தியசாலை திறம்பட இயங்கிவிடப்போவதில்லை, தேவையான வளங்கள் பூரணப்படுத்தப்பட்டால் மாத்திரமே திறம்பட இயங்க முடியும்.
அந்தவகையில் வைத்தியசாலைக்கு தேவையான வளங்களை பூர்த்திசெய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்து குறித்த விடயத்திற்கு நிரந்தரமான முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.
















