ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட இளையோர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை ஆரம்பப் போட்டியில் நேபாளத்தை 8 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிகொண்டது.
துபாய் தி செவன்ஸ் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டி 44 ஓவர்களுக்குள் நிறைவடைந்தது.
கண்டி திரித்துவ கல்லூரியின் வேகப்பந்துவீச்சாளர் செத்மிக்க செனவிரட்ன 5 விக்கெட் வீழ்த்தினார்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட நேபாள அணி 25.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 82 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
துடுப்பாட்டத்தில் சிப்ரின் ஷ்ரேஸ்தா 18, சஹில் பட்டேல் 12, நிராஜ் குமார் யாதவ் 10 ஓட்டங்களை பெற்றனர்.
பந்துவீச்சில் செத்மிக்க செனவிரட்ன 25 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். ரசித் நிம்சார, விக்னேஸ்வரன் ஆகாஷ், துல்னித் சிகேரா, சாமிக்க ஹீனட்டிகல ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
83 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 14.5 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 84 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
திமன்னத மஹாவித்தான 39 ஓட்டங்களுடனும் காவிஜ கமகே 24 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். விரான் சமுதித்த 10 ஓட்டங்களைப் பெற்றார்.
ஆட்டநாயகனாக செத்மிக்க செனவிரட்ன தெரிவானார்.
















