-இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்-
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கை மிக விரைவில் மீண்டு வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது. இலங்கையின் மீளக்கட்டியெழுப்பும் திட்டத்துடன் இந்தியா முன்னெப்போதையும் விட அதிக அர்ப்பணிப்புடன் கைகோர்த்துள்ளது என இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடினமான சமயத்தில் இலங்கையுடன் பலமாக இணைந்திருக்கவும், இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் பணிகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளை வழங்கவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனக்கு அறிவுறுத்தியதாகவும், அந்த முயற்சிகளை ஆராய்வதற்காக இந்தியப் பிரதமரின் விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு தான் விஜயம் மேற்கொண்டதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
பேரழிவுக்குப் பிறகு இலங்கையின் மீளமைப்பு செயற்பாட்டிற்கு வழங்கும் ஒத்துழைப்பு இந்திய-இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க. இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சரிடம் குறிப்பிட்டார்.
இலங்கையின் முன்னுரிமைகளை அடையாளம் கண்டு, மீளக் கட்டியெழுப்பும் அவசர தேவைகளை நிவர்த்தி செய்வதில் இந்தியா தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


















