ஆழ்கடல் மீன்பிடியின் இரைமீன் தூண்டில் முறையில் இரையாகப் பயன்படுத்தப்படும் பாலை மீன் எனப்படும் மீன் வகையை இறக்குமதி செய்வதற்கு வரிச்சலுகை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதன்போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆழ்கடலில் விசேட மீன்வகையான சூரைமீன் இனத்திற்குரிய மீன்களைப் பிடிப்பதற்காக பலநாள் கடற்கலன் உரிமையாளர்கள் ஆழ்கடல் மீன்பிடியின் இரை மீன் தூண்டில் முறையைப் பயன்படுத்துகின்றனர்.
அதற்கான இரையாக ஊசிக்கணவாய் மற்றும் பாலைமீன், சூடை, பறக்கும்மீன் போன்ற சிறிய மீனினங்களைப் பயன்படுத்தப்படுகின்றனர். மீன் வளங்களை பேண்தகு வகையில் நுகர்கின்ற முறையாக ஆழ்கடல் மீன்பிடியின் இரை மீன் தூண்டில் முறையில் பிடிக்கப்படுகின்ற மீன்கள் உயர்ந்த தரத்துடன் கூடியதாக அமைவதால், அதற்காக சர்வதேச சந்தையில் அதிக விலை உள்ளது.
நாட்டில் 2,200 பலநாள் கடற்கலன்கள் ஆழ்கடல் மீன்பிடியில் இரைமீன் தூண்டில் முறையைப் பயன்படுத்துவதுடன், அதற்காக வருடாந்தம் 8,000 மெற்றிக்தொன் இரை மீன்கள் தேவைப்படுகின்றது. ஆனாலும், குறித்த அளவில் 4,000 மெற்றிக்தொன் மாத்திரமே உள்நாட்டில் விநியோகிக்கக் கூடியாதாகவுள்ளது. அதனால், தனியார் துறையின் ஒத்துழைப்புடன், தொடர்ந்து வரும் காலங்களில் இரைக்காக பாலை மீன்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.


















