-அனர்த்தத்தை காரணம் காட்டி ஓடி ஒழியவும் போவதில்லை-
-நாம் வகுத்த பாதையில் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம்-
-திட்டவட்டமாக கூறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க-
அனர்த்தங்கள் மற்றும் தொற்றுநோய்களை காரணம் காட்டி ஆட்சியாளர்கள் தப்பித்துக்கொண்ட காலத்திற்குப் பதிலாக, பேரழிவுகளுக்கு முன்னால் மீண்டெழுந்து, முன்பை விட சிறந்த நாட்டை மக்களுக்கு உருவாக்கிக் கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் லோட்டஸ் அரங்கில் நேற்று முற்பகல் நடைபெற்ற ‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்:-
கடந்த வருட இறுதியில் எமக்கு நாடென்ற வகையில் பாரிய அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க நேரிட்டது. சில வருடங்களுக்கு முன்னர் பொருளாதார நெருக்கடியினால் நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளும் தாம் சார்ந்த துறைகளுக்கு அமைவாக பாதிக்கப்பட்டனர்.
அதனால் மீண்டும் அவ்வாறான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்காமல் எமது நாட்டை மீளமைத்து எதிர்பார்ப்புகளுடனான எதிர்காலத்தை கட்டியெழுப்பும் திடமான உறுதி எமது மக்களிடம் இருந்தது. அவ்வாறான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக தான் மக்கள் எமக்கு ஆட்சியை ஒப்படைக்கும் துணிச்சலான முடிவை எடுத்தனர்.
2025 ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்திய ஆண்டாகும். சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவும், அரச சேவையின் செயற்திறனிற்கும் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கவும், கல்வித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையிலே எமக்கு இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க நேரிட்டது.
நாம் தயாரித்துள்ள நிகழ்ச்சி நிரலை இந்த அனர்த்தம் குழப்பிவிடும் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் நாம் தயாரித்துள்ள நிகழ்ச்சி நிரல் நிலைபேறான, எமது எதிர்காலத்தை கட்டியெழுப்பும் திட்டம் என்பதில் எமக்கு திடமான உறுதி இருந்தது.
இந்த அனர்த்தத்தின் மீது பழிபோட்டு எம்மால் தப்பித்துக் கொள்ள முடியும். கடந்த காலத்தில் அவ்வாறு நடந்துள்ளது. 30 வருட காலம் யுத்தத்திற்குள் சகல நாசங்களையும் மறைத்தனர். சகல அழிவுகளுக்கும் காரணம் யுத்தம் தான் என்றவர்கள் இருந்தார்கள். அல்லது சில தொற்று நோய்களை தமக்கான கவசமாக பயன்படுத்தினார்கள்.
நாம் தயாரித்துள்ள நிகழ்ச்சி நிரலை மாற்றியமைக்கவோ, அதனை செயலிழக்கச் செய்யவோ அனர்த்தத்தை கவசமாக மாற்றுவதில்லை என்ற முக்கிய நிலைப்பாட்டை எடுத்தோம்.
அனர்த்தத்தின் போது பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் வரவு செலவுத் திட்டத்தை ஒதுக்கி இந்த அனர்த்தத்தை அடிப்படையாகக் கொண்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்குமாறு பலரும் கோரினார்கள். நாம் அவ்வாறு செய்யவில்லை.
சூறாவளி அனர்த்தத்திற்கு முன்னர் சமர்ப்பித்த அதே வரவு செலவுத்திட்டம் தான் டிசம்பர் 5 ஆம் திகதி நாம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நாம் மக்களின் ஆணைக்கு கட்டுப்பட்டுள்ளோம். எந்த அமைப்பின் அழுத்தத்திற்கும் எமது மக்கள் ஆணையை விட்டுக் கொடுக்கமாட்டோம்.
இந்த அனர்த்தத்திற்காக மாத்திரம் செலவிட 500 பில்லியன் குறைநிரப்பு பிரேரணையை முன்வைத்தோம். மேலும் தேவையானால் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சுமாராக 7 இலட்சம் குடும்பங்கள் ஏதோ ஒரு வகையில் இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டனர். 24 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். 6,000 வீடுகள் முழுமையாக சேதமடைந்தன. 110,000 வீடுகள் பகுதியளவு சேதமடைந்தன. சேதமடையாத ஆனால் குடியிருக்க பொருத்தமற்றவை என 10 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் அடையாளங் காணப்பட்டுள்ளன.
மொத்தமாக 20 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய வீடுகளை நிர்மாணிக்க வேண்டும். 2026 வரவு செலவுத் திட்டத்தில் 31 ஆயிரம் புதிய வீடுகளை நிர்மாணிக்க திட்டமிட்டோம்.
குறிப்பாக 2009 யுத்தம் நிறைவடைந்தாலும் யுத்தத்தினால் வீடுகளை இழந்த பெருமளவானவர்கள் வடக்கில் இடம்பெயர் முகாங்களிலும், சிறு குடிசைகளிலும் தங்கியுள்ளனர். 2500 வீடுகளை கட்ட வரவு செலவுத் திட்டத்தில் 5,000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது. நாம் அதனை மாற்றவில்லை.
அதே போன்று கிராமங்களில் பொருளாதார நெருக்கடிகளுடன் உள்ள மக்களுக்காக கிராமத்தவரின் உதவுயுடன் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்காக இந்த வருடத்தில் 10,000 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளோம். அதற்காக 10 ஆயிரம் மில்லியன் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கியுள்ளோம்.
10 இலட்சம் நிதி அனுசரணை மற்றும் மக்களின் ஒத்துழைப்புடன் 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்படும். அவை அனைத்தையும் ஒன்றிணைத்தால் 2026 இல் சுமார் 50,000 ற்கும் அதிகமான வீடுகளை கட்ட வேண்டியுள்ளது. மீள எழுச்சி பெறும் திடமான உறுதியுடன் உரையை நிறைவு செய்கிறேன் என்றார்.


















