-இரு ஆண்டுகளில் 87 வழக்குகள்-
-மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டு-
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சியிலும் பயங்கரவாத தடைச்சட்டப் பிரயோகம் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், 2024ம் 2025ம் ஆண்டுகளில் 87 வழக்குகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தை பொலிஸார் பிரயோகம் செய்துள்ளதாகவும் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
2025ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு நாடுகளினதும் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிக்கையில் இலங்கை தொடர்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 1983 -2009ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டக் காலத்தில், நிகழ்த்தப்பட்ட மிகமோசமான போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு அரசாங்கங்கள் தவறியிருக்கின்றன.
தேசிய நல்லிணக்கம் சார்ந்த வாக்குறுதிகளின் இடையே, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு அரசு மிகச்சொற்ப விடயங்களையே செய்திருக்கிறது.
சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகத்தை ஸ்தாபித்தல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குதல் மற்றும் நிகழ்நிலைக்காப்புச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளல் என்பன உள்ளடங்கலாக சட்ட மறுசீரமைப்புக்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிக்கும் இடையிலான 26 வருட போரில் சுமார் 100,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இக்காலப்பகுதியில் அரச படையினர் சித்திரவதைகள், சட்டவிரோதப் படுகொலைகள், பாலியல் வன்புணர்வு, பாலியல் வன்முறைகள், வலிந்து காணாமலாக்கல் மற்றும் பொதுமக்கள் மீதான ஒடுக்குமுறைத் தாக்குதல்கள் உள்ளிட்ட மிகமோசமான மீறல்களில் ஈடுபட்டனர். அதேபோன்று தற்கொலைக் குண்டு தாக்குதல், பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் சிறுவர் போராளிகள் உள்ளிட்ட மீறல்களில் விடுதலைப்புலிகள் இயக்கமும் ஈடுபட்டது.
இம்மீறல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கான நம்பத்தகுந்த உள்ளகப்பொறிமுறைகள் இன்மை மற்றும் பாதிக்கப்பட்ட சில சமூகங்களுக்கு எதிராகத் தற்போதும் தொடரும் ஒடுக்குமுறைகள் என்பவற்றின் காரணமாக இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை மேலும் இரு வருடங்களுக்குத் தொடர்வதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை செயற்பாட்டாளர்கள் பலரும் வரவேற்றிருந்தனர். இந்தக் குற்றங்களை புதியதொரு உள்ளகப்பொறிமுறையின் ஊடாக அணுகுவதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்த போதிலும், அதுபற்றிய விபரங்கள் எதனையும் அறிவிக்கவில்லை.
அதேவேளை மறுபுறம் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளகப்பொறிமுறைகள் தொடர்பில் தமது நம்பிக்கையீனத்தை அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னைய அரசாங்கங்களினால் குறைந்தபட்சம் சுமார் 10 ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்ட போதிலும்,
அவை பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படுவதற்கோ அல்லது வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தப்படுவதற்கோ வழிவகுக்கவில்லை. மனிதப் புதைகுழிகள் தொடர்பில் செயற்திறன்மிக்க விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான போதிய தொழில்நுட்ப வசதிகள் அரசாங்கத்திடம் இல்லை.
கடந்த காலங்களில் நிலவிய அரசியல் தன்முனைப்பின்மையானது இதுபற்றிய விசாரணைகள் மழுங்கடிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்தது. அதன் அர்த்தம் எந்தவொரு எலும்புக்கூடும் யாருடையவை எனக் கண்டறியப்படவோ அல்லது ஏனைய ஆதாரங்கள் முறையாகப் பேணப்படவோ இல்லை.
பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த காலங்களில் அச்சட்டத்தின் பிரயோகம் வெகுவாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக 2024 ஆம் ஆண்டு 38 வழக்குகளிலும், 2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் 49 வழக்குகளிலும் பொலிஸாரால் பயங்கரவாதத்தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


















