-மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு-
வரி ஏய்ப்பு செய்ததாக விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த 1.5 கோடி அபராதம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2022 ஜூன் 30 இல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
நடிகர் விஜய் வீட்டில் 2015 ஆம் ஆண்டு வருமான வரித்துறை நடத்திய சோதனையில் புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என்று கண்டறிந்தது. வருமானத்தை மறைத்ததற்கான ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து 2022 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்றம், வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து விஜய் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு திகதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று நீதிபதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், விஜய், வருமானத்தை மறைத்த காரணத்தால் அவருக்கு 1.5 கோடி அபராதம் விதித்ததில் எந்த விதிமீறலும் இல்லை என்று உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்தது.


















