ஜனாதிபதி நிதியம் பிரதேச செயலகங்களுக்கு பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் விளைவாக, ஒரு வருட காலப்பகுதிக்குள் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்கள் கிடைப்பது 59 வீதத்தால் அதிகரித்துள்ளது.
2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் மேலதிகமாக 1,964 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இந்த விண்ணப்பதாரர்களில் 70% க்கும் அதிகமானோருக்கு இதுவரையில் மருத்துவ உதவிகள் வழங்கி முடிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி நிதியத்திலிருந்து மருத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் விண்ணப்பங்கள் வந்தவண்ணம் உள்ளன. 2025 ஆம் ஆண்டில் வட மாகாணத்திலிருந்து விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுவது 253% வீதத்தினால் அதிகரித்துள்ளதுடன், கிழக்கு மாகாணத்தில் 135% இனாலும், மத்திய மாகாணத்தில் 116% இனாலும் மற்றும் ஊவா மாகாணத்தில் 108% இனாலும் விண்ணப்பங்கள் கிடைப்பது அதிகரித்துள்ளது.
பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள், 2025 பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்கள் ஊடாகவும் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம் மிகவும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால், ஜனாதிபதி நிதியத்தின் ஏனைய சேவைகளையும் பரவலாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


















