-முஜிபுர் ரஹ்மான் சந்தேகம் தெரிவிப்பு-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடித்து வெளிப்படுத்தாமல் 2026.04.21ம் திகதிக்கு முன்பதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கை நிறைவு செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறதா என சந்தேகிக்கப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகாலச் சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்புப்பட்டுள்ளது.
முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். உண்மைகள் வெளிவர வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்துள்ளோம். குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு எதிராக 23269 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 2190 சாட்சியாளர்கள் இருப்பதுடன், 24 பாதிக்கப்பட்டவர்கள் உள்ளார்கள். வழக்கு விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தில் பிரதான சூத்திரதாரி ஒருவர் உள்ளார் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் வழக்கில் பிரதான சூத்திரதாரி இல்லை. பிரதான சூத்திரதாரி இல்லாமலே வழக்கு விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முறையான விசாரணைகளை முன்னெடுத்து உண்மையை வெளிப்படுத்தும் பொறுப்பு நீதிமன்றத்துக்கும், பாதுகாப்பு தரப்பினருக்கும் உண்டு. இந்த பொறுப்பை நிறைவேற்ற அரசாங்கமும் கட்டுப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதுடன், பிரதான சூத்திரதாரிக்கும் தண்டனை கிடைக்க வேண்டும். நியாயமான விசாரணைகள் இடம்பெறுமா என்ற சந்தேகம் எழுகிறது.
குண்டுத்தாக்குதல் தொடர்பான வழக்கு தினசரி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. காலை 09.30 முதல் மாலை 04 மணிவரை வழக்கு விசாரணைகள் இடம்பெறவுள்ளன. பிரதான சூத்திரதாரியை அடையாளம் கண்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார். ஆனால் பிரதான சூத்திரதாரியின் பெயர் குறிப்பிடாமல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரதான சூத்திரதாரியின் பெயரை எழுதி விசாரணை ஆணைக்குழுவுக்கு ஒப்படைத்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன குறிப்பிட்டார். ஆனால் இன்றளவில் உண்மை வெளிப்படுத்தப்படவில்லை. பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்தாமல் 2026.04.21 ஆம் திகதிக்கு முன்னர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான வழக்கை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
ஏன் நாளாந்தம் வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். ஏன் அரசாங்கம் அவசரம் கொள்ள வேண்டும். நாளாந்தம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் போது முன்னிலையாக முடியாது. என்று குறிப்பிட்டு பல சிரேஷ;ட சட்டத்தரணிகள் வழக்கில் இருந்து விலகியுள்ளார்கள்.
நீதியான வழக்கு விசாரணைக்கான சூழல் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. காட்டு நீதிமன்றத்திலா குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. விரைவாக வழக்கு விசாரணையை முடிவுக்கு கொண்டு வந்து பிரதான சூத்திரதாரியை பாதுகாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.
குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான வழக்கினை புதுக்கடை நீதிமன்றத்தில் தினசரி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் கொழும்பு 07 அமைச்சர் ஒருவரின் இல்லத்தில் கடும் பாதுகாப்புடன் எவருக்கும் அனுமதியளிக்காமல் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அமைச்சரில் வீட்டில் வழக்கினை எவ்வாறு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.


















