-தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு-
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபத் நகரில் உள்ள கதீஜதுல் குப்ரா மசுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தொழுகைக்காக பெருந்தொகையான மக்கள் கூடியிருந்த நேரத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றது. மசூதியின் வாயில் பகுதியில் சந்தேகநபர் ஒருவர் பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டபோது, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடிப்பில் மசூதி கட்டிடத்தின் ஒரு பகுதி கடுமையாக சேதமடைந்ததுடன், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தத் தாக்குதலில் 170க்கும் அதிகமானோர் காயமடைந்து அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தற்கொலைத் தாக்குதலுக்கான பொறுப்பை ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஐ.எஸ்’ அமைப்பு ஏற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் அறிக்கையின்படி, ‘ஷpயா முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த வேளையில் தாக்குதல் நடத்தப்பட்டது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பின்னர், இஸ்லாமாபாத் நகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினர் முக்கிய பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2008 ஆம் ஆண்டு இஸ்லாமாபாதில் உள்ள மரியட் ஹோட்டல் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்குப் பிறகு, தலைநகரில் நிகழ்ந்த மிகக் கொடிய தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

















