இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராகவும், தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கக் கோரியும் கொழும்பில் உள்ள நீதியமைச்சிற்கு முன்பாக நேற்று எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் உள்ளிட்ட பல்வேறு சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய இந்தப் போராட்டத்தின்போது, அரசாங்கத்தின் அடக்குமுறை சட்டங்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
குறிப்பாக, ‘மக்கள் முன்னுள்ள அரசு பயங்கரவாத சட்டமூலத்தை மீளப்பெறு’, ‘அடக்குமுறை சட்டங்கள் வேண்டாம்’ போன்ற கோரிக்கைகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வலியுறுத்தப்பட்டன.
இந்தப் போராட்டத்தின்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பெருந்தோட்ட மக்கள் குழு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அந்தனி ஜேசுதாசன், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பதாக உறுதியளித்திருந்தது என்று சுட்டிக்காட்டினார்.
ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அரசாங்கம் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், மக்களை அடக்கி ஒடுக்கி ஆள்வதற்காகவும் அதே போன்றதொரு கடுமையான சட்டத்தை மீண்டும் மறைமுகமாகக் கொண்டு வர முயற்சிப்பது மக்களை ஏமாற்றும் செயல் எனவும் அவர் சாடினார்.


















