-துணைப் பிரதமர் அநுரவிடம் உறுதியளிப்பு-
இலங்கையின் மீளக் கட்டியெழுப்புதல், பொருளாதார சீர்திருத்தம் மற்றும் நல்லிணக்க வேலைத்திட்டங்களுக்கு ஐக்கிய இராச்சியம் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் – பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லம்மி உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், நாட்டிற்கு வருகைதந்த ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லம்மிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
‘டித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் மீளக் கட்டியெழுப்பும் பணிகள் குறித்து துணைப் பிரதமருக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதற்காகத் தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கு சுற்றுலாத்துறை, ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இதில் அனைத்து நட்பு நாடுகளின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும், ஐக்கிய இராச்சியம் இதில் ஒரு தனித்துவமான பங்களிப்பினை வகிக்க முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய இராச்சியம் மற்றும் இலங்கை இடையிலான பிணைப்பு மிகவும் விசேடமானது எனக் குறிப்பிட்ட துணைப் பிரதமர் டேவிட் லம்மி, இலங்கைக்கு மிக நெருக்கமான நாடாகச் செயற்படுவதை எப்போதும் உயர்வாகக் கருதுவதாகத் தெரிவித்தார்.
அத்துடன், இலங்கை தற்போது முன்னெடுத்து வரும் பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களுக்காகத் தனது நாடு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் பணிகள், மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் சாதகமான வேலைத்திட்டத்துக்கு ஐக்கிய இராச்சியத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும் என்றும் துணைப் பிரதமர் உறுதியளித்தார்.
போருக்குப் பின்னர் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் தற்போதைய அரசாங்கம் பின்பற்றும் வேலைத்திட்டங்கள் மற்றும் மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள விரிவான அபிவிருத்திப் பணிகள் குறித்தும் பாராட்டுத் தெரிவித்த அவர், அவற்றுக்கும் ஆதரவு வழங்குவதாகக் குறிப்பிட்டார்.


















