-நாடாளுமன்ற உறுப்பினர் எரங்க குணசேகர-
நாட்டில் முன்னெடுக்கப்படும் சட்டங்கள் தொடர்பில் ராஜபக்சர்கள் கேள்வி எழுப்பாமல், முதலில் பசில் ராஜபக்சவை நீதிமன்றில் முன்னிலையாக நடவடிக்கை எடுங்கள் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரங்க குணசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று கருத்து தெரிவிக்கும்போதே இதனை அவர் கூறியுள்ளார். எமது அரசாங்கம் சரியான நடைமுறையில் நீதியை நிலைநாட்டுகிறது. அதனை எதிரணியினர் விமர்சிக்கின்றனர்.
குறிப்பாக அரகலய போராட்டம் தொடர்பில் விசேடமாக குறிப்பிட்டாக வேண்டும். குறித்த போராட்டம் இடம்பெற்று தற்போது நான்கு ஆண்டுகள் ஆகின்றன. அரகலயவில் எமது அரசாங்க தரப்பினர் இருந்ததாக எதிர்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.
உண்மையில் அது மக்களுடைய போராட்டம். 14 ஆண்டுகளாக இந்த நாட்டை வங்குரோத்தடைய செய்த கூட்டத்தை மக்கள் விரட்டியடிக்க முன்வந்தனர். நாங்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டோமே தவிர, வன்முறையை தூண்டவில்லை. இது தொடர்பில் நாடுபூராகவும் 3000 க்கும் அதிக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன
இது கொடிய ஆட்சியாளருக்கு எதிரான ஆர்ப்;பாட்டம். ராஜபக்சர்களே தமது தரப்பினரை ஒன்றிணைத்து குறித்த ஆர்ப்பாட்டத்தில் குழப்பத்தை விளைவிக்க முயற்சித்தனர்.
இவ்வாறு பிரச்சினைகளை தூண்டியவர்களே கூறுகின்றனர், எமது தரப்பு ஆட்சிக்கு வந்தால் நீதியான விசாரணையை முன்னெடுப்போம் என்று. நீதியை நிலைநாட்ட முடியுமென்றால் முதலில் அவர்களது சித்தப்பாவை அழைத்து வந்து நீதியை நிலைநாட்டுங்கள். இவ்வாறே தேவையற்ற விடயங்களை எதிர்தரப்பினர் வெளிப்படுத்துகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.


















