நீதிமன்ற வழக்குகளில் ஏற்படும் தேவையற்ற தாமதங்களைக் குறைக்கும் வகையில் 7 புதிய நீதிமன்றங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
தற்போது நீதிமன்றங்களில் சுமார் 11 இலட்சம் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. இது கடந்த 15 வருடங்களாக நிலவி வரும் ஒரு நிலையாகும்.
2024ஆம் ஆண்டளவில் நீதித்துறையில் 4,422 ஊழியர்களுக்கான பற்றாக்குறை நிலவியது. தற்போது இதனை நிவர்த்தி செய்ய 4,130 புதிய ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மேலும் இரண்டு நீதிமன்றங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளன. அத்துடன், அளுத்கடை நீதிமன்ற வளாகத்தில் மேலும் 5 நீதிமன்றங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன என்றார்.


















