-பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய-
திறமையான, ஒழுக்கமான மற்றும் உலகளாவிய ரீதியில் போட்டியிடக்கூடிய உழைப்பாளர் படையொன்றை உருவாக்குவதற்கு, இலங்கையின் தொழில்சார் கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்துவதும், அதனை சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுடன் இணைப்பதும் அத்தியாவசியமானது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இலங்கை பட்டயப் பணியாளர் முகாமைத்துவ நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, அங்கீகாரத்தின் புதிய உச்சங்கள் எனும் கருப்பொருளிலான விசேட நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நமது கல்விப் பாதைகளையும் வாய்ப்புகளையும் விரிவுபடுத்துவதில் இந்தத் தருணம் மிகவும் முக்கியமானது. சர்வதேச அங்கீகாரம் பெற்ற, நிபுணத்துவ மற்றும் தொழிற்துறை சார்ந்த பல்வேறு வாய்ப்புகளை வழங்கக்கூடிய கல்விச் சூழலை நாம் உருவாக்க வேண்டும். இது நாம் கல்வித்துறையில் ஆரம்பித்துள்ள சீர்திருத்தச் செயல்முறைகளுடன் ஒத்துப்போகின்றது.
கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட வயது எல்லைக்கு உட்பட்டது மாத்திரமல்ல, எவர் வேண்டுமானாலும் கல்வி கற்றுக்கொண்டே தொழிலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்துவதே எமது நோக்கமாகும்.
இலங்கை பொருளாதார மீட்சி, நிறுவன ரீதியான சீர்திருத்தம் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தி வரும் இக்காலகட்டத்தில், திறமையான மற்றும் ஒழுக்க விழுமியங்களைக் கொண்ட மனிதவளத் தலைமைத்துவத்தின் தேவை இன்றியமையாதது. போட்டித்தன்மை மிக்க பொருளாதாரம் என்பது முதலீடு மற்றும் உட்கட்டமைப்புகளில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை, நிறுவனங்களைத் திறம்பட வழிநடத்தக்கூடிய தகுதிவாய்ந்த தொழில் நிபுணர்களின் மீதே தங்கியிருக்கின்றது எனக் குறிப்பிட்டார்.


















