-கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்-
மன்னார் மாவட்டத்தில்; அண்மைய நாட்களாக சட்டவிரோத கடற்றொழில்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்களில் தெரிவு செய்யப்பட்ட 36 மீனவர்களுக்கு மீன்பிடி வலைத் தொகுதி வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தில் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் மீனவர்களுக்கு உதவித் திட்டங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிரான கட்டுப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மீனவர்களுக்கான கடற்றொழில் உபகரணங்கள் வழங்கும்போது அவை கடற்றொழில் திணைக்களத்தின் அனுமதி பெற்றவையாக இருக்கவேண்டும். தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புயல் மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ஐந்து பேர் கொண்ட ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு சேதங்கள் கணக்கிடப்பட்டு இழப்பீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டைனமைட் பயன்படுத்தி மீன் பிடித்த இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் இரண்டு இந்திய இழுவைப் படகுகள் கைப்பற்றப்பட்டதோடு 10 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழல் மற்றும் மீன் வளப் பாதுகாப்பு கருதி டிராக்டர் இயந்திரம் மூலம் கரைவலை இழுப்பதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இது குறித்து மீனவர் சங்கங்களுக்கு எழுத்துபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் பாரம்பரிய முறையில் கைகளால் வலை இழுக்க அனுமதி உண்டு. ஆனால் இயந்திரங்கள் பயன்படுத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது திணைக்களம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.


















