-நிரோஷன் பாதுக்க சவால்-
அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆதரவு 65மூ ஆக உள்ளது என்றால் மாகாண சபை தேர்தலை நடத்திக் காட்டுங்கள் என ஊழல் எதிர்ப்புப் படையணியின் அழைப்பாளர் நிரோஷன் பாதுக்க சவால் விடுத்துள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆதரவு 65% ஆக உள்ளதாக ‘வெரிட்டே ரிசர்ச்’ நிறுவனம் நடத்திய ஆய்வுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.இது உண்மையானது என்றால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டுமென கோருகின்றேன்.
இந்த அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருந்தும் தேர்தல் முறையைத் திருத்தவோ அல்லது கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவோ முடியாமல் இருப்பது அதன் அனுபவமின்மையைக் காட்டுகிறது.
இவ்வாறான நிலையில்,விருப்பு வாக்கு முறையிலோ அல்லது வேறு எந்த முறையிலோ மாகாண சபைத் தேர்தலை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது. அரசாங்கம் விதைக்கும் வெறுப்புக்கு மக்கள் வழங்கும் பதிலை மாகாண சபை தேர்தலில் காண முடியும் என்றார்.
















