-பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர-
மாகாண சபைத் தேர்தலை தேசிய மக்கள் சக்தி அரசு நிச்சயமாக நடத்தும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நாம் பாரிய வெற்றியைப் பெறுவோம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஊடகங்களிடம் தெரிவித்தார்.
நீண்டகாலமாக இழுபறியில் உள்ள மாகாண சபைத் தேர்தல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார். தேசிய மக்கள் சக்தி அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை முன்னெப்போதையும் விட தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது. மிகுந்த நம்பிக்கையுடனேயே இதனை நான் கூறுகின்றேன். எமது அரசுக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு மாகாண சபைத் தேர்தலின்போது வெளிப்படையாகத் தெரியவரும்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான உரிய ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பூர்வாங்கப் பணிகள் நிறைவடைந்தவுடன், உரிய காலப் பகுதிக்குள் தேர்தல் அறிவிக்கப்படும். குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் எமது மாற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளதால், அங்கேயும் எமது கட்சியே வெற்றி பெறும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.


















