தர்கா நகரைச் சேர்ந்த மாணவி ஒருவர், தந்தையின் தாக்குதலால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும், பொலிஸ் பாதுகாப்புடன், கணிதப் பரீட்சைக்கு நேற்றைய தினம் (23) தோற்றினார்.
தர்கா நகரில் வசிக்கும் மாணவி மற்றும் அவரது 10ஆம் வகுப்பு படிக்கும் தங்கை, நண்பரின் வீட்டிலிருந்து தாமதமாக வீடு திரும்பியதாக கூறி, தந்தையால் தாக்கப்பட்டனர். வலியைத் தாங்க முடியாமல் அவர்கள் அளுத்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
பொலிஸார் உடனடியாக அவர்களை நாகொட வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில் குறித்த மாணவிக்கு உடல் வலி இருந்தபோதிலும், நேற்றைய தினம் (23) கணிதப் பரீட்சை நடைபெற்றதனால், “இந்த பரீட்சைக்காக வருடங்களாக உழைத்தேன்” இதை தவறவிடமாட்டேன்’ என்ற உறுதியுடன் மாணவி பரீட்சை எழுத விருப்பம் தெரிவித்தார்.
இதைக்கேட்டு, மனிதாபிமான நடவடிக்கை எடுத்த பொலிஸ் அதிகாரிகள் விசேட அனுமதிகளைப் பெற்று, இரண்டு பெண் பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்புடன், மாணவியை பரீட்சை மையத்துக்கு அழைத்துச் சென்றனர். தேவையான எழுதுபொருட்கள் மற்றும் உணவையும் வழங்கினர்.
பரீட்சை முடிந்ததும், மாலை 4.10 மணியளவில் மீண்டும் பாதுகாப்புடன் குறித்த மாணவி வைத்தியசாலைக்குத் திருப்பிக் கொண்டு வரப்பட்டார்.
மேலும், தாக்குதல் நடத்திய தந்தையை கைது செய்ய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


















